சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை என விஜய் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சி என அறிவித்து புதிய வாய்ப்பை விஜய் ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் , வாக்கு வங்கியை நிரூபிக்காத தவெகவுடன் கூட்டணி வைக்க இன்றுவரை எந்த கட்சிகளும் வரவில்லை. இதனிடையே அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதோடு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வழக்கம் போல் தனித்தே போட்டி என அறிவித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க திமுக கூட்டணி கட்சிகளும் அணிமாறும் மனநிலையில் இல்லாதது விஜய்க்கு பின்னடைவு என பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவ தொடங்கின. அதற்கேற்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நல்ல செய்தி விரைவில் வரும் என அமித்ஷா ஆருடம் கணித்ததும் அரசியல் களமே பரபரப்பாக மாறியது. போதாக்குறைக்கு பாஜகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் விஜய் கூட்டணிக்கு வந்தால் நல்லது என பேசியது யுகங்களை உண்மையாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜய் வர வாய்ப்பு இருக்கிறது என ஹின்ட் கொடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைகிறார் என யுகத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இந்த நிலையில் சென்னை பனையூரில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் முன்பே கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அந்த வகையில் கொள்கை ரீதியான பாஜாகாவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதை விஜய் தீர்மானமாக அறிவிக்க அதிகாரப்பூர்வமாக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகாவோ இல்லை நம் தமிழக வெற்றி கழகம் என்றும், அதோடு தவெக தலைமையில் தான் கூட்டணி விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்களும் கவனம் பெற்றுள்ளது.

அதாவது முதல் மாநாட்டில் அறிவித்தது போல தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதில் இன்னும் விஜய் உறுதியாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதே மாதிரி தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதிலும் விஜய் உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தவெக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் கசிந்தது. விஜயை அதிமுக கூட்டணிக்குள் அழைத்து வர வேண்டும் என்ற அசைன்மென்ட்டை வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைத்தது அதிமுக. ஆனால் ஆட்சியில் பங்கு சரிக்கு சமமாக தொகுதி எண்ணிக்கை என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் டிமாண்டை ஏற்க அதிமுக யோசித்து வந்த சமயத்தில்தான் திடீரென அமித் ஷா என்ட்ரி கொடுத்து ஆட்டையை கலைத்து அதிமுகவை தன்பக்கம் இழுத்து கொண்டதாக சொல்கிறார்கள்.

அதற்கு பிறகு நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர் கூட விஜய் தனியாக நிற்கவே வாய்ப்பு இருக்கிறது என அப்போதே சூசகமாக கருத்து கூறியிருந்தார். அதற்கு பிறகும் அரசியல் நகர்வுகளை கவனித்து வந்த விஜய் அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இனிவரும் காலங்களில் கூட பாஜக அல்லாத அதிமுக கூட்டணியிலும் விஜய் இடம்பெற வாய்ப்பில்லை என சொல்கிறார்கள். ஏனென்றால் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அதிமுக நிச்சயம் ஏற்காது என்பதால் அதிமுக கூட்டணிக்கு இனிமேல் விஜய் செல்ல வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்தை முடித்த பிறகுதான் விஜய் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதே செயற்குழு கூட்டத்தை கூட்டியதற்கும் பின்னணி இருப்பதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் உழைக்க வேண்டும் என்ற உரிமை குரல் தவெகவினர் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த ஆதங்க குரல் வலுவாக ஒலிக்க தொடங்கியதாக கூறுகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் என தொடர்ச்சியாக எழுந்து வந்த யூகம் இது ஆப்லைன் மற்றும் ஆன்லைன் தவெக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட முடிவெடுத்து, கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் சொல்கிறார்கள். விஜயின் அறிவிப்பு மூலம் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தற்போது வரைக்கும் தனித்து நிற்பதுதான் விஜயின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் தேர்தல் நெருக்கத்தில் எப்படி வேண்டுமானாலும் களம் மாறும் என்பதற்கு கடந்த காலத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் விவகாரத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழக அரசுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்...!