மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப்ரல் 8) ஒப்புதல் அளித்துள்ளது. மொத்த மக்களவைத் தொகுதிகளை 543லிருந்து 816ஆக உயர்த்தி, பெண்களுக்கு 273 இடங்கள் ஒதுக்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் ஏப்ரல் 16 முதல் 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பெரும் தோல்விகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் மூடிமறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “2024 தேர்தலில் இருந்தே ‘நாரி சக்தி வந்தன் அதினியம் 2023’ சட்டத்தை அமல்படுத்துமாறு காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை பிரதமர் மோடி நிராகரித்ததற்காக, இந்தியப் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டிஸ்சார்ஜ்!! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அரசு தாமதம் காட்டியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இப்போது திடீரென அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2029ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் உறுதி செய்யப்படும். இது இந்திய அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
தற்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!! மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!