2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஒரு மிகமுக்கியமான அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளார். பிரபல யூடியூப் ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இன்று விஜய் முன்னிலையில் தன்னை அதிகாரப்பூர்வமாகக் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டிற்குத் தலைவர் விஜய் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே, அவருக்குத் ‘தேசியப் பத்திரிகை செய்தித் தொடர்பாளர்’ (National Press Spokesperson) என்ற உயரிய பொறுப்பை வழங்கி விஜய் அதிரடி காட்டினார். 'ரெட் பிக்ஸ்' (RedPix) ஊடகத்தின் உரிமையாளராகவும், துணிச்சலான அரசியல் விமர்சகராகவும் அறியப்படும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட், கடந்த சில மாதங்களாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளுக்கும், விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கும் ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாகப் பல்வேறு அரசியல் நெருக்கடிகளையும், கைது நடவடிக்கைகளையும் எதிர்கொண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட், தற்போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியிருப்பது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய அளவிலான ஊடகங்களில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கவும், டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலப் பத்திரிகையாளர்களுக்குத் தவெக-வின் கொள்கைகளைப் புரியவைக்கவும் ஃபெலிக்ஸின் அனுபவம் பெரிதும் உதவும் என விஜய் நம்புவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "அரசியல் விஜய் மிகவும் வலிமையானவர்" என ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன்னரே குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அவரே அக்கட்சியின் அதிகாரப்பூர்வக் குரலாக மாறியிருப்பது அரசியல் அரங்கில் 'ஹாட் டாக்காக' மாறியுள்ளது.
இதையும் படிங்க: "நாங்கள் நாய் கிடையாது, பகுத்தறிவுள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு தவெக அருண்ராஜ் பதிலடி!
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!