விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் இந்து மதத்தவர்களால் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் விநாயகரை வழிபட்டனர்.
பல வீடுகளில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தற்போது சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. மூன்று நாள் விடுமுறை முடிவடைந்த நிலையில், மக்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் இப்போது தலைநகருக்கு மீண்டும் வருகை தருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து சொந்த வாகனங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக கடந்த மூன்று நாட்களில் தென் மாவட்டங்களை நோக்கி சுமார் 1 லட்சத்து 53 ஆயிரத்து 220 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. விடுமுறை முடிந்ததும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வாகனங்கள் திரும்பத் தொடங்கியுள்ளன. இன்று காலை வரை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து சென்னை திசைக்குச் சென்றுள்ளன.
வழக்கத்தை விட அதிகமான வாகனப் போக்குவரத்து காணப்பட்டதால், சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் நீண்ட நேர நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையேயான வாகனப் போக்குவரத்து அதிகரிப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது. தனியார் வாகனப் பயன்பாடு உயர்வதே நெரிசலுக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து துறை மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!