தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியான தவெகவில் பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள் என்றும், 'ஸ்லீப் மோடில்' இருக்கும் முதலமைச்சர் எப்போது விழித்துக்கொண்டு குற்றங்களைக் கட்டுப்படுத்துவார் என்றும் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில், என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? 'Sleep Mode'-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு அதிர்ச்சி குற்றச்சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மர்மக் கும்பல் ஆயுதங்களுடன் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது கணவரும் மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடத்தப்பட்ட 2 மகள்கள் சில மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் வீட்டை விட்டு வெளியேறிய மற்றொரு சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையும் அரங்கேறியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: அடடா.!! ஆசிய பாரா விளையாட்டு.! பதக்கங்களை குவிக்கும் இந்தியர்கள்..! உதயநிதி பெருமிதம்.!!
இந்த சோஃபா மாடல் ஆட்சி அமைந்தது முதலே ஆளுங்கட்சியில் 'பாலியல் குற்றவாளிகள் பிரிவு' என்று தனியாக ஒன்று ஆரம்பிக்கும் அளவிற்குப் பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் முதலமைச்சர் பேசும் பெண்கள் பாதுகாப்பின் லட்சணமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டாமல் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ் ஷூட்' செய்யும் போக்கில் மட்டுமே அரசு இயங்குவதாக விமர்சித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கத் தவெக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!