தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி இரு கட்டங்களாக நடைபெற்று, இன்று (ஏப்ரல் 16) முடிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, நாளை (ஏப்ரல் 17) முதல் மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் காரணமாக பள்ளிக் கட்டிடங்கள் வாக்குச்சாவடிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருப்பதால், தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் தேர்வு முடிவுகள், மதிப்பீடு மற்றும் பள்ளிகளைத் தேர்தல் பணிகளுக்குத் தயார்படுத்தும் பணிகளுக்கு போதிய நேரம் கிடைக்கும்.

மாணவர்கள் இந்த நீண்ட விடுமுறையை எதிர்பார்த்து உற்சாகத்தில் இருக்கின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் கோடைக் காலத்தில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!
சுற்றறிக்கையில், கோடை வெப்பம் தீவிரமாக இருப்பதால் மாணவர்களை வெளிப்புற விளையாட்டுகளின்போது அடிக்கடி தண்ணீர் அருந்தச் செய்யுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளியின் தாக்கத்தைத் தவிர்க்க தொப்பி, குடை போன்றவற்றைப் பயன்படுத்தவும், உச்சி வெயில் நேரத்தில் (காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை) வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தான பொருட்களை (கத்தி, மருந்து பாட்டில்கள், மின்சார சாதனங்கள்) குழந்தைகளின் எட்டாத இடத்தில் பத்திரமாக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட எந்த நீர் நிலையிலும் மாணவர்களை குளிக்க அனுமதிக்கக் கூடாது. நீச்சல் தெரியாத குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயம் அதிகம் உள்ளதால், பெற்றோர்கள் இதில் கடுமையான கண்காணிப்பு செலுத்த வேண்டும்.
விடுமுறை காலத்தில் தனிமை உணர்வு, மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு உண்ணுதல், இசை கேட்பது, விளையாட்டு போன்ற சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்கலாம்.தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டில் அதிக நேரம் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, கோடைக் காலத்துக்கு ஏற்ற பழங்கள், காய்கறிகளை அதிகம் கொடுத்து உடல் நலத்தைப் பேண வேண்டும்.

அருகிலுள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று குறைந்தது ஒரு மணி நேரம் புத்தகம் படிக்க ஊக்குவிக்கலாம். காமிக்ஸ், சிறுவர் கதைகள், நீதிக் கதைகள், பெருந்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு நூல்கள் ஆகியவற்றைப் படிக்கச் சொல்லலாம். இசை, நடனம், ஓவியம், கைவினை போன்ற ஆர்வங்களை வளர்க்கும் பயிற்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
இந்த விடுமுறை காலம் மாணவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதே துறையின் எதிர்பார்ப்பு. பெற்றோர்கள் இந்த அறிவுரைகளை கடைப்பிடித்து, குழந்தைகளின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விடுமுறையை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: இன்று வெளியாகிறது தவெக வாக்குறுதி புத்தகம்..! நீலாங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!