மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு காரணம் வங்கிகள், உள்ளூர் கடன் கொடுப்பவர்களிடம் அதிக வட்டியில் கடன் வாங்கும் விவசாயிகள் பயிர் இழப்பு அல்லது விலை வீழ்ச்சியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் மழையின்மை, வறட்சி, பருவமழை தோல்வி, அல்லது பூச்சி தாக்குதல் போன்றவை பயிர்களை அழித்து, விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கின்றன. மராத்வாடா பகுதி இதற்கு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

அதுமட்டுமின்றி சந்தையில் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல், உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்கள், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளுக்கு பணம் இல்லாமல் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தொடர் தோல்விகள், சமூக அழுத்தங்கள், மற்றும் மனநல ஆதரவு இன்மை ஆகியவை விவசாயிகளை தற்கொலை முடிவை நோக்கி தள்ளுகின்றன.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஓயாத மொழிப் பிரச்னை.. 20 ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 26 வரை 520 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மாநில வருவாய்த் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (430 விவசாயிகள்) இருந்து சுமார் 20% அதிகரிப்பு ஆகும். மத்திய மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 126 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் ஜனவரி-ஜூன் 2025 இல் சத்திரபதி சம்பாஜிநகர் (92), நாண்டெட் (74), பர்பானி (64), தாராஷிவ் (63), லத்தூர் (38), ஜல்னா (32), ஹிங்கோலி (31) பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
313 தகுதியான வழக்குகளில் 264 குடும்பங்களுக்கு மட்டுமே தற்போது வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 146 வழக்குகள் பரிசீலனையில் உள்ள நிலையில், மேலும் 61 வழக்குகள் இழப்பீட்டிற்கு தகுதியற்றவை எனக் கருதப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட மும்மடங்கு அதிகமாகும்.

வறுமையில் வாடும் தங்களின் இத்துயரத்தை போக்க, கடன் தள்ளுபடி திட்டங்கள், குறைந்த வட்டி கடன்கள், பயிர் இழப்பை ஈடு செய்யும் திறமையான காப்பீட்டு திட்டங்கள், கிராமப்புறங்களில் ஆலோசனை மையங்கள், மனநல ஆதரவு திட்டங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் பாசன வசதிகளை மேம்படுத்தி, விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் விவசாயிகள், மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து இந்த பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்க சண்டைல அந்த பிஞ்சு குழந்தைங்க என்னம்மா பண்ணுச்சு.. ஆத்திரத்தால் நேர்ந்த சோகம்.. உருக்குலைந்த குடும்பம்..!