பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்த பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி, காவலாளி மதுரை வீரன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் காவலாளிகள் பணிகளைப் புறக்கணித்து, பழனி அடிவாரம் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது எந்தவித விசாரணையும் இன்றி நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் ஓய்வதற்குள் அவசரகதியில் பழனி கோவில் காவலாளி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமித் திருக்கோயிலுக்கு வந்த பெண் ஒருவரை காவலாளி மதுரைவீரன் தாக்கியதாக கொடுத்த புகாரின் பெயரில் அந்த காவலாளியை எந்த விசாரணையும் இன்றி காவல்துறை கைது செய்ததாகவும், காவலாளி அஜித்குமார் காவல்துறையால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதன் ஈரம் இன்னும் காயவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

அதற்குள் அதே பாணியில், மீண்டும் அதே ஒரு வழக்கில், அவசர கதியில் கைது நடந்திருக்கிறதோ என மக்களிடையே சந்தேகமும், பழனி கோயில் காவலாளிகள் இடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சாடியது. அதனால், கோயில் காவலாளிகள் மதியம் முதல் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருவதாகவும் இதனால், பேட்டரி கார், வின்ச், ரோப் கார், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட அனைத்து சேவைகளும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் முழுமையாக முடங்கியுள்ளதால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. திருப்புவனம் அஜித்குமார் வழக்கு போல இந்த வழக்கில் நடந்துகொள்ளாது என்ற வாக்குறுதியை காவலாளிகளுக்கு அளித்து, பெறப்பட்ட புகாரின் பெயரில் முறையான விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!
இதையும் படிங்க: தினமும் பிரியாணி விருந்து... திருமங்கலத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக, அதிமுக...!