மதிமுகவின் சென்னை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய வைகோ, நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். நமது இயக்கம் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். எனவே கட்சியில் இருப்பவர்கள் தலைதுவண்டு விடக்கூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வந்தேன். எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் நான் 31 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிப் பாதுகாத்து வருகிறேன். ஆனால் மதிமுக காணாமல் போய்விட்டது, கரைந்து போய்விட்டது, வைகோ அரசியல் முடிந்து விட்டது என்றெல்லாம் செய்தி போடுகிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

தொடர்ந்து, மதிமுக கட்சியில் இருந்து எட்டு பேராவது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும் என்று எண்ணத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். அப்போது திருச்சியில் நடந்த திமுக மாநாட்டை புறக்கணித்தேன். திமுக மாநாட்டிற்கு செல்லாமல் சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்திற்கு சென்று கூட்டணி வைத்தது என்னுடைய அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு என்று கூறினார். மேலும் திமுக கூட்டணியில்தான் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம்; திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்; இது என் கட்டளை என்றார். வைகோவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கமா? - துரை வைகோ சுளீர் விளக்கம்...!
இந்நிலையில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்ற வைகோவின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். வைகோவை தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும். ஆனால் வைகோ நன்றியை மறந்துவிட்டு பேசுவது நல்லதல்ல. அவர் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றியை மறப்பது நன்றன்று. அவர் நன்றியை மறக்கக் கூடாது. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் மதிமுகவுக்கு அங்கீகாரமே கிடைத்தது என்றார்.
அதிமுகவால் தான் (மதிமுக) அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதையெல்லாம் மறந்து விட்டு வாய் கூசாமல் ஒரு கட்சியை இழிவுபடுத்தி பேசுவது அவரது பண்புக்கு நல்லதல்ல. திமுகவை பற்றி வைகோ பேசாத பேச்சில்லை, வைக்காத விமர்சனம் இல்லை. திமுகவிடம் எதிர்பார்த்து, அதிமுகவை வைகோ குறைசொல்கிறார்" என்றார்.

மேலும் பேசிய அவர், கட்சிக் கொடியை அகற்றும் விவகாரத்தில் ஒரு கண்ணில் நெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு போன்ற பாகுபாடு காட்டக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். கொடியை அகற்ற முற்பட்டால் அனைத்து கொடியும் எடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிமுக கொடி பறக்கக் கூடாது. தவெக கொடி பறக்கக் கூடாது, திமுக கொடி மட்டும் பறக்கலாமா? திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். இதை ஜனநாயக நாட்டில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் தமிழர்கள். எந்த நிலையிலும் எப்படிப்பட்ட அடக்குமுறையாக இருந்தாலும் 2026 தேர்தலில் வெற்றி பெற போவது அதிமுக தான். அதிமுக தான் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்படி நடந்திருக்க கூடாது! பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. வருத்தம் தெரிவித்த துரை வைகோ..!