அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத் தேர்தல் நெருங்க ஒரு வருடம் இருக்கும் நிலையில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். கடந்த ஜூலை 7ஆம் தேதி கோவையில் இருந்து தொடங்கிய தனது சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திமுக ஆட்சி நடக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவைகள் குறித்து மக்களிடையே எடுத்துரைத்து வருகிறார். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணை அது உறுத்துவதாகவும் அதிமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் இன்றும் நாளையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இபிஎஸ் வருகையை முன்னிட்டு வேளாங்கண்ணி நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனிடையே, அரசு போஸ்டர்கள், திமுக போஸ்டர்கள் மீது அதிமுக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக திமுக அதிமுகவினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தை அதிமுக கடுமையாக கண்டித்து உள்ளது. பொம்மை முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சிப் பயணம் தான் உறுத்துகிறது என்று பார்த்தால் அவரை வரவேற்க வைக்கப்பட்டிருக்கும் போஸ்டர்கள் கூட கண்ணை வருத்துவதாக விமர்சித்தது. உடனே காவல்துறையை ஏவி, வேளாங்கண்ணியில் உள்ள போஸ்டரை அகற்றத் துடிக்கும் இந்த அரசு, இதே வேகத்தில் என்றைக்காவது குற்றங்களைத் தடுத்திருக்கிறதா என்று கேட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு விஷயம் சொல்லட்டுமா? நெருக்கடியிலும் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தது அதிமுக தான்! - இபிஎஸ்
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்ற நினைப்பில் ஸ்டாலின் அரசு செய்வதெல்லாம் வேடிக்கையின் உச்சம் என்று அதிமுக விமர்சித்துள்ளது. இதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் நாள்தோறும் விண்ணை முட்டும் #ByeByeStalin கோஷம் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என்னது ரத்தின கம்பளமா? பாஜக கூட்டணி ரத்த கம்பளம்.. இபிஎஸ்க்கு முத்தரசன் பதிலடி..!