சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அஜித் குமாரை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போதே ஐந்துக்கும் மேற்பட்டோர் அவரை தாக்கியதாக அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் இதனால் அவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்திருந்தன.
இதையும் படிங்க: அஜித் குமார் கஸ்டடி மரணம்! போலீசார் குடும்பத்தினரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு...

சிபிசிஐடி போலீசார் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தது. தொடர்ந்து வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தற்போது, அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேன் ஓட்டுனராக பணியாற்றிய காவலர் ராமச்சந்திரன் முக்கிய சாட்சியாக மாறி உள்ளார். எங்கெங்கு அழைத்து சென்றார்கள் என சிபிஐ அதிகாரிகளை அழைத்துச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யார் யார் அஜித் குமாரை தாக்கினார்கள் என்பது தொடர்பாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய சாட்சியாக மாறி உள்ளார். அஜித் அனுபவித்த கஸ்டடி சித்திரவதைகளுக்கு முக்கிய நேரடி சாட்சியாக இருப்பவர் ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்ல! போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித் வீட்டிற்கு சென்று இபிஎஸ் ஆறுதல்..!