போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார். அஜித்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் அஜித்தின் தாயார், சகோதரர் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அஜித் குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதிமுக போராடிய பின்னரே காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அஜித் குமார் உடலில் 44 இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அதனால்தான் அவர் இறந்தார் என்றும் உடற்கூறு அறிக்கை வெளியானதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்..! என்ன நடந்தது? நிகிதாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை..!
எனவே அஜித்குமார் மரணத்திற்கு முழு பொறுப்பை அரசாங்கம் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார். அரசாங்கம் சரியான முறையில் இந்த வழக்கை விசாரித்து இருந்தால் விலைமதிக்க முடியாத உயிரை இழந்து இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.

இந்த அரசு எப்போது பதவி ஏற்றதோ அப்போதிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். சம்பவம் நடந்தது அரசாங்கத்திற்கு தெரியும்., காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் என தெரிவித்த அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, இந்த வழக்கை நீர்த்துப்போக மேற்கொண்டு நடவடிக்கையால் தான் அதிமுக போராட்டம் நடத்தியதாகவும், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை திருட்டு நடக்காத நாளே இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு போய்விட்டதாக குற்றம் சாட்டினார். 20 ஆணவ படுகொலைகள் நடந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களிடத்தில் பெரும் எதிர்ப்பு வந்ததாலும் அதிமுக நீதி கிடைக்க போராடியதாலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையே கண்டனம் தெரிவித்ததாலும் வேண்டா வெறுப்பாக அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசு அக்கரை செலுத்தவில்லை என்றும் வேறு வழியில்லாமல் வேலை மற்றும் நிதி கொடுத்ததாக கூறினார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அஜித் குமாரின் சகோதரர் விரும்பிய இடத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக சார்பாக இன்னும் மூன்று நாட்களில் கட்சி விதிகள் படி, அஜித் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்.. வீரியமெடுக்கும் சிபிஐ விசாரணை! மருத்துவமனையில் முகாமிட்ட அதிகாரிகள்..!