சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அஜித் குமார், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். ஜூன் 27 ஆம் தேதி, ஒரு பெண்ணின் 9.5 பவுன் நகை திருட்டு புகாரின் அடிப்படையில், திருப்புவனம் காவல் நிலையத்தின் தனிப்படை காவலர்களால் அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விசாரணையின் போது, அஜித் குமார் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித் குமாரின் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில், அவர் விசாரணையின் போது தப்பிக்க முயன்றபோது விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இந்த விளக்கம் அவரது உறவினர்களாலும், பொதுமக்களாலும் மறுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அஜித் குமாரின் உடலில் பல இடங்களில் உள்காயங்கள், இரத்தக் குழாய்களில் சேதம், மற்றும் பிளாஸ்டிக் பைப், இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு மிளகாய் பொடி தூவப்பட்டு, தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த அறிக்கைகள், காவல்துறையின் விளக்கத்திற்கு முரணாக இருந்ததால், இந்த சம்பவம் காவல் கொலை என கருதப்பட்டு, பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியது.
இதையும் படிங்க: கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்ல! போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித் வீட்டிற்கு சென்று இபிஎஸ் ஆறுதல்..!

இந்த வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஐந்து தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார், மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக, தனிப்படை காவலர்களின் அதிகார துஷ்பிரயோகம் கருதப்பட்டது.
இதையடுத்து, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த தனிப்படைகளை கலைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த காவலர்கள் மாற்றுப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர்.இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர், காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.
விசாரணையை முறையாக நடத்துவதற்கு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய போலீசாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்..! என்ன நடந்தது? நிகிதாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை..!