திருப்புவனம் கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை மூன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அருகில் அந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அதற்கு அனுமதி வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு கொடுத்திருந்தார்கள்.

ஆனால் மூன்றாம் தேதி அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்க முடியாது. ஏற்கனவே வேறு ஒரு ஆர்ப்பாட்டம் அங்கு திட்டமிடப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது. அதற்குப் பிறகு ஐந்தாம் தேதி நடத்தலாம் என்று கேட்டபோது சென்னையில் வேறு ஒரு நிகழ்வு இருப்பதன் காரணமாக பாதுகாப்பு வழங்க முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்துதான் ஆறாம் தேதி நடத்தலாம் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கூறியிருந்தார்கள். அப்போது சிவானந்தா காலனியில் போராட்டம் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

அதற்கான மனுவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான சில கேள்விகளை தமிழக வெற்றிக் கழகத்திற்கு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது காவல்துறைக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை கொடுக்க வலியுறுத்துமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!
காவல்துறை சார்பில் கோரப்பட்ட 13 கேள்விகளுக்கு பதில் கொடுத்த பிறகும் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்த தவெக, இன்று அதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது. போராட்டத்திற்கு குறுகிய காலமே இருப்பதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: திமுக கதறனும்... தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!