சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 27ம் தேதி நகை காணாமல் போன வழக்கில் அஜித்குமார் என்ற இளைஞரை மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அஜித் குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியது. அவரது உடலில் 44க்கும் மேற்பட்ட காயங்கள், சிராய்ப்புகள், இரத்தக் கட்டுகள், மூளையில் இரத்தக் கசிவு மற்றும் சிகரெட்டால் சூடு வைத்ததற்கான தடயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காவல் சித்திரவதையாலேயே மரணம் நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித்குமார் லாக்அப் டெத் வழக்கு.. தலைமறைவான நிகிதா கல்லூரிக்கு ரிட்டர்ன்..!

விஷயம் பூதாகரமானதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஐ.டி.ஐ படிப்பை முடித்தவர் என்பதால், அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப இந்தப் பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அரசு வேலையும், வீட்டு மனைப் பட்டாவும் திருப்தி அளிக்கவில்லை என அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், எனக்குக் கொடுத்த அரசு வேலையில் திருப்தி இல்லை. நான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் வேலை கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தினமும் அவ்வளவு தூரம் சென்று வருவது மிகவும் சிரமம். இதை மாற்றித் தருமாறு கேட்டுள்ளோம், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல் தண்ணீர் வசதி இல்லாத காட்டுப்பகுதியில் 3 சென்ட் இடத்தை ஒதுக்கியுள்ளார்கள். இதுவும் எங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என நவீன்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஜித்குமார் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு! சந்தேகத்தை கிளப்பும் ஜி.கே.வாசன்.. உண்மை வெளிவருமா?