நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக மானாமதுரை குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் என்ற இளைஞர் விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 44 காயங்கள், உட்பட தலையில் மற்றும் மார்பில் காயங்கள், மிளகாய்ப் பொடி பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளிட்டவை மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கடுமையாக கண்டித்திருந்தார். இந்த மரணம் தமிழக காவல்துறையின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் கொடூரமான, மனிதநேயமற்ற மற்றும் நியாயமற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். முதலில் தமிழக அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்க முயன்றதாகவும், மதுரை உயர்நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் சினிமாக்கு OK தான்.. ஆனா, அரசியல்ல?.. அமைச்சர் காந்தி ஓபன் டாக்..!

மேலும், இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விரைவாக நீதி வழங்க வேண்டும் என்றும் காவலர்களே குற்றவாளிகளாக இருப்பதால், தமிழக காவல்துறையால் நியாயமான விசாரணை நடத்தப்படாது எனவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக உன்னுடைய கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் அஜித் குமாரின் மரணத்தைக் கண்டித்து நாளை காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அந்த இடத்தில் மற்றொரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றதால், தமிழக வெற்றி கழகத்திற்கு அனுமதி வழங்க முடியாத என்றும் வேறு இடத்திலோ அல்லது வேறு தேதியிலோ ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தான் அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால், தமிழக வெற்றி கழகத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படும் சூழல் இருப்பதாக ஏற்கனவே திமுக மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் அதனை காட்டுவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்.. விசாரணை வெலங்கிடும்..! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்..!