தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் மருத்துவத்துறை அமைச்சரின் சமீபத்திய கருத்துகள் குறித்து, தனது அதிகாரப்பூர்வச் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தவெக அரசையும் அமைச்சரையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்கள் என்ற தொனியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இது தமிழகத் தாய்மார்களின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் செயலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களைச் சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தவெக, பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்குத் தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் மற்றும் கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை அளிப்பது போன்ற மோசமான சூழல்கள் இன்னமும் களையப்படவில்லை என அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்' என்ற அதிகாரத் தொனியைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழக அரசையும் முதலமைச்சரையும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!