சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் அளிப்பதாகக் கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆரம்பத்தில் சிலர் மீது மட்டும் வழக்கு இருந்த நிலையில், விசாரணையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் இணைக்கப்பட்டது. லஞ்சத் தடுப்புச் சட்டத்தின் கீழும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.இதையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

அதில் இடைக்கால நிவாரணம் மறுக்கப்பட்டதால், முன்ஜாமீன் கோரி தனியாக மனு தாக்கல் செய்தார். நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் நடைபெற்ற விசாரணையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், தப்பிச் செல்ல மாட்டார் என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஏற்கனவே கைதான சிலர் ஜாமீனில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அரசியலை விட்டு விலகணும்..! நேருவின் தம்பி கொலை வழக்கு என்னாச்சு..? திமுகவை பந்தாடிய அமைச்சர் நிர்மல் குமார்..!
ஆனால் காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நிதிப் பயங்கரவாதம் தொடர்பானது என்றும், வசூலிக்கப்பட்ட தொகை ரூ.400 கோடி வரை இருக்கலாம் என்றும், முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அன்பில் மகேஷைக் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இறுதியில் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் .
இதையும் படிங்க: ரூ.634 கோடி லஞ்சப் புகார்..! கே. என். நேரு மனு தள்ளுபடி..! புதிய நெருக்கடி..!!