தமிழ்நாடு அரசு, கிராம ஊராட்சிகளில் வணிக தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தொழில் உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை, அரசிதழில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்கள், குறிப்பாக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேநீர் கடைகள், உணவகங்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தமிழக அரசின் எந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை என தெரிவித்தார்.
கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அட்மினுக்கு வைக்கிறேன் ஆப்பு” - அன்புமணி மேல் அடுத்த அம்பு தொடுக்கும் ராமதாஸ்... நாளை பாய்கிறது வழக்கு?

அதிக வருவாயும், இலாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில், வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என அன்புமணி குற்றம் சாட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை என சாடினார்.
இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும் என்று கூறிய அவர், நடைமுறையில் இருக்காது., எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அக்கா, அண்ணன் எல்லாரும் வரணும்! அழைப்பது அன்புமணி டா... பாமக உரிமை மீட்பு பயண பாடல் வெளியீடு..!