தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரின் கண் எதிரேயே மூன்று பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மூன்று நபர்களைச் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலைக்குச் சேர்ந்தனர். திருநெல்வேலியில் வசித்து வந்த முகமது மஹ்புல் ஹுசைன் (வயது 27) என்பவர், இந்தக் கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்களை வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார்.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக இருந்ததாலும் அந்தத் தம்பதி வேலையிலிருந்து விலகுவதாக முடிவு செய்து, கேரளாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று இரவு அவர்கள் அரசர்குளத்திலிருந்து ஆட்டோவில் திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!
தம்பதி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, முகமது மஹ்புல் ஹுசைன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி, அவர் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் பைக்கில் காத்திருந்துள்ளார்.
ஆட்டோ அங்குச் சென்றதும், மஹ்புல் ஹுசைன், "தம்பதி கல்குவாரியிலிருந்து பணத்தைத் திருடிவிட்டதாக" ஆட்டோ டிரைவரிடம் சொல்லி அவர்களை அங்கிருந்து ஒரு காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, அந்தப் பெண்ணின் கணவரை மூவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதுடன், அவரது கண் எதிரிலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பல மணி நேரத்திற்குக் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட தம்பதியை மூன்று பேரும் அங்கிருந்து ரோட்டுப் பகுதியில் விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனடியாகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
தப்பியோடிய முக்கியக் குற்றவாளியான முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு இளம் சிறார்கள் என மூன்று பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். வெளி மாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து, அவர்கள் கணவர் கண் எதிரேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "காந்தியடிகள் மீதான வன்மம்!" - 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!