கேரளாவில் சமீபத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படம் கடைசி இருக்கையில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறியதை அடுத்து கேரளத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் வரிசையாக அமர்வதற்கு பதிலாக அரைவட்ட வடிவில் அல்லது 'ப' வடிவில் அமர வைக்கும் நடைமுறையை கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தற்போதைய நேரடி முறையிலான வடிவமைப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது என்றும் 'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. எனவே 'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மாற்றம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், அனைவரும் சமமாக கவனம் பெறுவதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டது. வாய்ப்புள்ள வகுப்பறைகளை 'ப' வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் இதனால் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமர்த்தும் முடிவு தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார். மாணவர்களுக்கு கழுத்து வலி மற்றும் கண் பார்வை பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் தமிழக அரசு இந்த முடிவை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். ப வடிவ இருக்கைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்., வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இருப்பதை முதலில் உறுதி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மாணவர்களுக்கு கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு கவனச் சிதறல்கள் ஏற்படும் என்றும் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் என்ற நகைச்சுவையாகவே இது உள்ளதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: 2 நிமிஷம் கூட நிக்கல... இதுவே ஜெ.வா இருந்திருந்தா? நொந்துபோன அதிமுகவினர்..!
இதையும் படிங்க: SORRY வேண்டாம் நீதி வேண்டும்!! விஜய் தலைமையில் போராட்டம்.. குவியும் தொண்டர்கள்..!