தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், அரசு திட்டங்களில் ஆளும் கட்சித் தலைவர்களின் பெயர்களையோ, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது எனக் கோரப்பட்டது.

நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்தலாம் என்றும், ஆளும் கட்சியின் சின்னங்கள் அல்லது முன்னாள் தலைவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் தெரிவித்தனர். அரசு நிதியில் இயங்கும் திட்டங்களை தனிப்பட்ட நபர்களின் சாதனைகளாக விளம்பரப்படுத்துவது தவறு என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு.. இது முடியாது போலயே.. தமிழக அரசை விளாசிய சுப்ரீம்கோர்ட்..!!
“உங்களுடன் ஸ்டாலின்” போன்ற திட்டங்களில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்துவது மக்கள் நலனுக்காகவே எனவும், இது உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணல்ல எனவும் தமிழக அரசு வாதிடுகிறது. மேலும், அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல பெயர் மற்றும் புகைப்படங்கள் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்குவதற்கு தடை இல்லை என்றாலும், முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் திமுக பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகில் ரோஹத்சி, வில்சன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த வழக்கை புதன் கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்கள் இந்த வழக்கிற்கு தடையாக இருக்காது என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மணல் தட்டுப்பாட்டை போக்க.. கரூரில் புதிதாக 2 மணல் குவாரி.. தமிழக அரசு விண்ணப்பம்..!!