தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுமானத் துறையின் மணல் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கரூர் மாவட்டத்தில் நெரூர் வடக்கு மற்றும் அச்சமாபுரம் கிராமங்களில் புதிதாக இரண்டு மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நெரூர் வடக்கு மணல் குவாரியில் இருந்து 2 ஆண்டுகளில் 3,21,000 மீட்டர் க்யூப், அச்சமாபுரம் மணல் குவாரியில் இருந்து 4,80,000 மீட்டர் க்யூப் மணல் எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தமிழ்நாடு நீர்வளத்துறை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இந்த குவாரிகளை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நீடித்து வருவதால், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணலை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுக்கடுக்கான அறிவிப்புகள்.. மாஸ் காட்டும் தமிழக அரசு..!
கடந்த காலங்களில் மணல் குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக திருச்சி, தஞ்சை, அரியலூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தி, ரூ.4,730 கோடி மதிப்பிலான முறைகேடுகளை கண்டறிந்தது. இதனால், புதிய குவாரிகளில் முறைகேடுகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.

மணல் தட்டுப்பாட்டை போக்க புதிய குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய குவாரிகள் ஆறுகளை அழித்து, நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். மாறாக, மணல் இறக்குமதி மற்றும் எம்-சாண்ட் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க, மறுபுறம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், 26 அரசு குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புடன் இந்த குவாரிகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு மக்களிடையே கலவையான கருத்துகள் நிலவுகின்றன.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல்முறை..!! 4 IAS அதிகாரிகள் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்..!