நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார். இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஜூலை 28 இறந்த கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிணவரையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கவின் மரணத்திற்கு நீதி கோரி அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று சிறையில் உள்ள சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வழக்கு விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆணவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தந்தையான காவல் உதவி சார்பு ஆய்வாளர் சரவணனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கவின் மரண விவகாரத்தில் தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், தூத்துக்குடியில் உள்ள கவின் குடும்பத்தினரை அடுத்தடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓயாத சாதி வெறியாட்டம்! அடக்கப்படாத ஆணவ படுகொலைகள்... கொதித்துப் போன திருமா..!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள கவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கவின் வந்து படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்க தக்க, மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் தனியாக ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இதில் நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை” எனக்கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய கவின் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் கைது - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!