தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நீடித்து வரும் மின்வெட்டை சரிசெய்யும் நோக்கில் ஓர் யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிக விலையில் கொள்முதல் செய்வதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மின்வெட்டு என்பது இன்று நேற்று உருவான பிரச்சினை அல்ல. திமுக அரசு பதவியேற்ற நாளிலிருந்தே இந்த நெருக்கடி தொடர்ந்து வருகிறது.
இத்தகைய சூழலில் மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணித்து குறைந்த விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருந்தும், கடைசி நேரத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மின்வாரியத்தின் நிர்வாகத் திறனின்மையையே வெளிப்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.ஏற்கனவே கடும் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மின்வாரியத்தின் நிதி நிலைமை இந்த அதிக விலை கொள்முதலால் மேலும் மோசமடையும்.

இந்த கூடுதல் செலவு எதிர்காலத்தில் மின் கட்டண உயர்வாக பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அபாயம் உள்ளது. அத்துடன் சிறுகுறு தொழில்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். இதனால் அரசின் தவறான மின்சாரத் திட்டமிடலுக்கான விலையை மக்களின் வரிப்பணத்திலிருந்து செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என வானதி சீனிவாசன் எச்சரித்தார்.ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் எவ்வளவு மின்சாரம், எந்த நிறுவனத்திடமிருந்து, எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!
மக்கள் மீது கூடுதல் மின் கட்டணச் சுமையை ஏற்றாமல், நீண்டகால மின்சாரத் தேவையை நிறைவு செய்ய இயங்காமல் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களின் அலகுகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.வளர்ச்சியுடன் இணைந்த தீர்வுகளே தேவை. வெறுமனே கடனை ஏற்றிச் செல்வதில் எந்த பயனும் இல்லை என வானதி சீனிவாசன் தனது கருத்தை முடிக்கிறார். தமிழ்நாட்டின் மின்சார நெருக்கடியை நிரந்தரமாக தீர்க்க அரசு உடனடியாக திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது அழுத்தமான கோரிக்கையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!