தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, செயற்கையாக இடைத்தேர்தல் நடைபெற வழிவகுத்ததாகக் கூறப்படும் தொகுதிகளில், தேர்தல் நடத்துவதற்கான அனைத்துச் செலவினங்களையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்தே வசூலிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய அரசு மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க இந்திய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கே. சுதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள இந்த மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைத்தேர்தல்களுக்கான துல்லியமான செலவின விவரங்கள் மற்றும் அது தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மனுதாரர் தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய சட்ட அமைச்சகம், இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர். மேலும், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று, பின்னர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான சத்தியபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர், எஸ். ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் இடைத்தேர்தல்களுக்கான முழுச் செலவினங்களையும் சம்பந்தப்பட்ட காரணகர்த்தாக்களான வேட்பாளர்களிடம் இருந்தே சட்டப்படி வசூலிக்க முடியுமா, அதற்கான அரசியல் சாசன அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்த விவகாரங்கள் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.. சிஜேபி போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் வார்னிங்!!