கட்சிக்கு நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.100 கோடி யாரைச் சென்றடைந்தது என்பதைக் கண்டறிய, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, கட்சி நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப் பிறகு, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதில்லை என அரசு கொள்கை முடிவு எடுத்திருந்த நிலையில், அங்கீகாரம் வழங்குவதற்காகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஷ் அரெஸ்ட்..! முன்ஜாமீன் தள்ளுபடி... அதிரடி காட்டிய போலீஸ்..!!
இந்த வழக்கில் 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அவரை அன்பில் மகேஷ் பாதுகாப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முகாந்தரம் இருப்பதாகவும், முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளையும் விசாரணையையும் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் யாரைச் சென்றடைந்தது என்பதைக் கண்டறிய, அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் சாதாரண நபர் அல்ல; உயர்ந்த பதவியை வகித்தவர், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாலும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டிருப்பதாலும் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, கட்சி நிதி என்ற பெயரில் பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, அன்பில் மகேஷுக்குத் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் பிரிவுகள் சேர்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: “உங்க நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே சிரிக்குது...” - தவெக அமைச்சர் சிடிஆரை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடியார்...!