சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது. இறந்த நபர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இன்னும் நீக்கப்படாமல் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த பயோமெட்ரிக் பதிவு அமல்படுத்தப்படுகிறது. தற்போது சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ள நிலையில், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் விரல் ரேகையையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிக்கும் குடும்பத்தினரும் வரும் 25-ம் தேதிக்குள் அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்.
இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தை நேரில் அணுகி, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயரை நீக்கச் செய்யலாம். ரேஷன் அட்டைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் மாறுபட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதால் இத்தகைய சிக்கல்கள் எழுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தவிர்க்க ஆதார் எண்ணை உடனடியாக இணைத்து, பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் புதிய ரேஷன் கார்டுகள்..! வேகம் எடுக்கும் பணிகள்..! உணவுத்துறை அதிரடி உத்தரவு..!

மேலும், இறந்த நபர்களின் ஆதார் விவரங்களை சேகரித்து அறிக்கையாக சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவை தகுதியான குடும்பங்களுக்கு மட்டும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இந்த சுத்திகரிப்பு பணி முறைகேடுகளைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூட்டுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்கும் செயல்கள் தடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்து, தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் பதிவு செயல்முறை எளிதாகவும், விரைவாகவும் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!