இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அடியோடு சீரழிக்கும் நச்சுப் போதைப்பொருட்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) சார்பில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
சமூகத்தை அச்சுறுத்தும் போதை அரக்கனை வேரறுத்து, போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் இந்த விழிப்புணர்வு முன்னெடுப்பு ஒருங்கிணைக்கப்பட்டது.
வடசென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், அக்கல்லூரியின் தேசிய மாணவர் படைப் பிரிவினருடன் இணைந்து, சென்னையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான புதுக்கல்லூரி மற்றும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் என்சிசி மாணவர் பட்டாலியன்களும் கைகோர்த்து அணிவகுத்தன.
இதையும் படிங்க: தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

கல்லூரி வாயிலில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பேரணியானது, வண்ணாரப்பேட்டை வள்ளலார் நெடுஞ்சாலை, ஜி.ஏ. ரோடு, எம்.சி. ரோடு உள்ளிட்ட முக்கிய வணிக வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெருக்கடியான பகுதிகள் வழியாகச் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து சென்றது.
பேரணியில் சீருடையுடன் மிடுக்காகப் பங்கேற்ற என்சிசி மாணவ, மாணவிகள், போதையை ஒழிப்போம்! இளைய சமுதாயத்தைக் காப்போம்!, போதைப்பாதை அழிவுப்பாதை!" உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், பொதுமக்களை ஈர்க்கும் விழிப்புணர்வு முழக்கங்களை ஆவேசமாக எழுப்பியவாறும் சென்றனர்.
சாலைகளில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தின் கொடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இப்பேரணி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றது.
இளைஞர்களும் மாணவச் செல்வங்களும் தவறான போதைப் பாதையில் சென்று தங்களது வாழ்வை தொலைத்துவிடாமல் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வுப் பேரணி வடசென்னையில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 2 நாளில் 5,000 குழந்தைகள்! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வேகமெடுக்கும் விநியோகம்!