ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டிச் சென்னையில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மக்கள் பாதுகாப்பாகக் கொண்டாட சென்னை மாநகரக் காவல்துறை அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மற்றும் நாளை கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கடலில் இறங்கவும், குளிக்கவும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை முழுவதும் 19,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க நகரம் முழுவதும் 425 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டுச் சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கடலில் இறங்கவோ அல்லது குளிக்கவோ அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 31) மற்றும் நாளை (ஜனவரி 1) ஆகிய இரு நாட்களும் இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தத் தடையுமில்லை; ஆனால், ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு முன் கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நியூ இயர் கொண்டாட்டம்: மெரினா, பெசன்ட் நகர் பக்கம் போறீங்களா? முதல்ல இதை படிங்க! புத்தாண்டு டிராஃபிக் ரூல்ஸ்!
மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது என்றும், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு இரவைக் கண்காணிக்கச் சென்னை முழுவதும் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று இரவு 9 மணி முதல் மாநகரின் 425 முக்கிய இடங்களில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் மற்றும் மதுரவாயல் பைபாஸ் சாலைகளில் 30 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாகசப் பயணங்கள் கண்காணிக்கப்பட உள்ளன. “கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு இடையூறு இன்றி அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ள காவல்துறை, விதிமீறல்களைக் கண்டறிய ட்ரோன் கேமராக்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், அமைதியான புத்தாண்டு பிறப்பிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொந்தளிப்பில் இடைநிலை ஆசிரியர்கள்..!! சென்னையில் 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!