திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையத்தில் குமரன் குன்று முருகன் கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, சிலைகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை அங்கு சென்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள், பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுப்பு ஏற்படுத்திய நிலையில், இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட சுமார் 200 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகள் அறிமுகம்... ஜன.28ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை...!

கோவில் இடிப்பு முயற்சியை பார்வையிடச் சென்ற இந்து முன்னணி தலைவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தாராபுரம் ரோட்டில் இந்து முன்னணி உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இடிப்பை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் அகற்றம் தொடர்பாக மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: டெல்லி காற்று மாசுபாட்டுக்கு காரணம் யார்? வெளிப்படையாவே சொல்லுங்க!! அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!