டெல்லியில் நீண்டகாலமாக நிலவி வரும் காற்று மாசு பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், டெல்லியின் காற்று மாசுக்கு கனரக வாகனங்கள் மற்றும் முறையற்ற கட்டுமானப் பணிகளே முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2022இல் காற்று தர மேலாண்மை ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் பல முக்கிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
டெல்லியின் காற்று மாசில் சுமார் 40 சதவீதம் வாகனங்களால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இதை வெளிப்படையாக கூறாமல், விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதே மொத்த காரணம் என்று பழி போடப்பட்டது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரித்த போதும் டெல்லியில் தெளிவான நீல வானம் தெரிந்தது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: ஒடிசா, சத்தீஸ்கரை அலற விட்ட கும்பல்! கண்ணிவெடி, கொரில்லா தாக்குதல் நடத்திய நக்சல்கள் 27 பேர் சரண்!

வாகன போக்குவரத்தும் கட்டுமானப் பணிகளும் மாசுக்கு காரணமானால் அவற்றை முழுமையாக நிறுத்த முடியாது என்பதால், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தும்போது சமூக மற்றும் பொருளாதார சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. இதற்கு துறை சார்ந்த நிபுணர்களின் மதிப்பீடு தேவை என்றும் கூறியது.
காற்று தர மேலாண்மை ஆணையம் துறை சார்ந்த நிபுணர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, இரு வாரங்களுக்குள் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. டெல்லியின் காற்று தரம் மோசமடைவதற்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து ஒருமித்த கருத்தை எட்டி, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலில் காரணங்களையும் விளைவுகளையும் துல்லியமாக கண்டறிவதே நிபுணர் குழுவின் பொறுப்பு என்றும், அதன் பிறகே மாசை சமாளிப்பது குறித்த தீர்வுகளை கூற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த விஷயத்தில் காற்று தர மேலாண்மை ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
டெல்லி காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்த உத்தரவு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! 10 ஊர்களில் கனமழை! லிஸ்ட் இதோ!