சென்னை ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் நடைபெறும் விழாவில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கி முதலமைச்சர் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் நேற்றுடன் (புதன்கிழமை) முழுமையாக நிறைவடைந்துள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறவுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. பரிசுத் தொகுப்பிற்கான அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதம் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். கரும்பை பொறுத்தவரை, மக்கள் பசுமையாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் மூலம் உடனுக்குடன் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, 3,000 ரூபாய் ரொக்கப் பணத்தைப் பயனாளிகள் முன்னிலையிலேயே எண்ணி வழங்க வேண்டும் என்றும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாலை 6 மணிக்கே கடைகளைத் திறந்து விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடியும் வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை டோக்கன் கிடைக்கப் பெறாதவர்கள் அந்தந்தக் கடை ஊழியர்களை அணுகி உரிய நாட்களில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "நாளை காலை 8 மணி.. மிஸ் பண்ணிடாதீங்க!" பொங்கல் ஸ்பெஷல் ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!
இதையும் படிங்க: "தியேட்டர்ல தெறிக்கப்போகுது!" ஜனநாயகன் vs பராசக்தி -ஆன்லைனில் டிக்கெட் பிடிக்க போட்டி!