தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (சனிக்கிழமை) திருநெல்வேலி செல்கிறார். இதற்காக நாளைக் காலை 11 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து 'ரோடு மார்க்கமாக' நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார்.
நெல்லை வருகையின் முதல் கட்டமாக மதிய உணவிற்குப் பிறகு, மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் முக்கியக் கலந்தாலோசனை நடத்துகிறார். வரும் 2026 தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த 'மீட்டிங்' மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் நடைபெறும் கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்கும் அவர், அதனைத் தொடர்ந்து தங்கபாண்டியன் நினைவாகத் திமுக கொடியினை ஏற்றி வைக்கிறார். அன்றைய தினத்தின் ஹைலைட்டாக, இரவு 7 மணி அளவில் பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகத்தை' முதலமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார்.
இரண்டாம் நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுத் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி நெல்லை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மேம்பாலத்தில் திடீர் விபத்து… வேன் கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம்!
இதையும் படிங்க: 1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!