கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர். தற்போது பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை 50-யைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்.. கேட்கும் மரண ஓலம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கரூர் சென்றுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை கரூர் செல்லவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து இன்று இரவோடு இரவாக தனி விமான மூலம் முதலமைச்சர் கரூர் விரைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: கரூரில் பெரும் துயரம்.. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. கதறும் உறவினர்கள்..!!