மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக VB-G RAM G (Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission - Gramin, 2025) என்ற புதிய சட்டமுன்வடிவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும், கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இத்திட்டம் 2005 முதல் இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2006 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஆண்டுக்குச் சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 12,000 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது; வறட்சி மற்றும் பாசன வசதியற்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இதுவே முக்கிய ஆதாரமாகும்.
புதிய சட்டத்தில் வேலை நாட்களை 125-ஆக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், மற்ற விதிகள் கூட்டாட்சி தத்துவத்தைச் சீர்குலைப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய முறையில் திறனற்ற தொழிலாளர்களின் ஊதியச் செலவை ஒன்றிய அரசு முழுமையாக ஏற்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு 60:40 என்ற நிதிப்பங்கீட்டு முறை முன்மொழியப்பட்டுள்ளது, இது மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: "காந்தியடிகள் மீதான வன்மம்!" - 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!
தேவை அடிப்படையிலான ஒதுக்கீட்டிலிருந்து மாறி, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் அளவுகோல்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளூர் தேவைகளைப் பாதிக்கும். கிராம ஊராட்சிகளின் திட்டமிடல் அதிகாரத்தைக் குறைத்து, ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிப்பது அடிமட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும்.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது கிராம சுயராஜ்ஜியக் கொள்கையைச் சிதைக்கும் செயலாகும்.
புதிய விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவைச் செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், அதற்குப் பதிலாக மாநிலங்களுடன் ஆலோசித்து, தற்போதுள்ள மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்திலேயே வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது போன்ற திருத்தங்களைச் செய்து திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மணல் கொள்ளை பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும்! சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!