சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை என்ற நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு யானையை கட்டுப்படுத்தும் அங்குசம் மற்றும் நூலின் முதல் பிரதி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, மேனாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, திக் விஜய் சிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நூலை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது நாட்டில் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் காவி மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை தமிழ்நாட்டை நாசப்படுத்திட அனுமதிக்க மாட்டோம் என்றும் இது புத்தகம் வெளியீட்டு விழா என்பதைவிட உரிமைக்குரல் எழுப்பும் விழா என்பதை சரியாக இருக்கும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பித்தலாட்ட அரசியலே அவரின் முழுநேரப் பணி.. எடப்பாடியை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.பாரதி!!

ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து நிற்போம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி, சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது எனவும் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பாஜக மாடல் எனவும் கூறினார்.

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் என புகழாரம் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை புதிய தேசிய கல்விக் கொள்கையால் நாசப்படுத்திட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இந்த விஷயத்திலும் நீதியை நிலை நட்ட போராடுவோம் என தெரிவித்தார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்து விடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்தார்.
இதையும் படிங்க: மே 24ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்..! தமிழ்நாட்டுக்கான நிதி விவகாரங்கள் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பு..!