தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (டிசம்பர் 26) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 27) ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக நாளைக் காலை 8 மணிக்குச் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாகக் கள்ளக்குறிச்சிக்குப் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர், உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள 'பௌ சென்' (Pou Chen) நிறுவனத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பிறகு, கள்ளக்குறிச்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்குச் செல்லும் முதலமைச்சர், அங்குத் தங்கி ஓய்வெடுக்கிறார்.
இரண்டாம் நாள் பயணமாகத் டிசம்பர் 27-ஆம் தேதி காலை, திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார். பின்னர் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அன்று மாலை திருவண்ணாமலையிலிருந்து சென்னை திரும்பும் வழியில் கலசபாக்கம், வந்தவாசி மற்றும் செய்யாறு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைகளைத் திறந்து வைக்கிறார். இந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் சாலை மார்க்கமாகச் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க: ₹32.62 கோடியில் புத்துயிர் பெற்ற சென்னையின் பாரம்பரியம்! – விக்டோரியா ஹாலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
இதையும் படிங்க: "இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!