தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையிலும், இத்துறையில் உலகளாவிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் வகுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டது. முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் நவீன உள்கட்டமைப்புடன் கூடிய குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா அமைக்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். மேலும், நடப்பு நிதியாண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது, ஒன்றிய அரசின் திட்டத்துடன் இணைந்து நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப மாநில அரசு பிரத்யேக ஊக்கத்தொகைத் திட்டத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சிப் வடிவமைப்பு, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தயாரிப்பு, வேஃபர் ஃபேப்ரிகேஷன் (Fabs), ATMP/OSAT, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை பலப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற அர்லேகர்..! பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முதல்வர் விஜய்..!!
ஒன்றிய அரசின் 'செமிகான் இந்தியா 2.0' திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாகத் தமிழ்நாடு அரசும் சிறப்பு ஊக்கத்தொகைகளை வழங்கும். அதேபோல், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இடம்பெறாத போதிலும், தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் தகுதியான புதிய திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவைக்கேற்பத் தனித்துவமான ஆதரவையும் சலுகைகளையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் மற்றும் செயல் இயக்குநர் செல்வி பல்லவி வர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாலத்தீவில் கைதான 25 தூத்துக்குடி மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!