இஸ்லாம் சமயத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சமூக நீதிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்றும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உரிமைகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அது சமூக தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்தீர்ப்பு தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கனிமொழி எம்.பி விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாம் சமயத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
இதையும் படிங்க: அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

சாதிய ஒடுக்குமுறைகளால் ஏற்பட்ட பிற்படுத்தப்பட்டத் தன்மையை அளவிட மதத்தை தேர்வு செய்யும் உரிமை ஒரு நிபந்தனையாக இருக்கக் கூடாது; தவெக அரசு இந்த விவகாரத்தில் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளை உறுதியாகத் தொடர வேண்டும். மதம் மாறிய மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாதிய அடுக்குமுறைகளால் வரலாற்று ரீதியாகப் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள், சமத்துவத்தை நோக்கி மதம் மாறினாலும் அவர்களது சமூகப் பின்னடைவு தொடர்வதைக் கருத்தில் கொண்டு, முந்தைய திமுக அரசு மேற்கொண்ட சட்டப்பூர்வ முன்னெடுப்புகளைத் தற்போதைய தவெக அரசு தீவிரமாக முன்னெடுத்துச் சென்று உரிமைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!