செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து பேருந்துகளை இயக்குவதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கும் நோக்கிலும் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தைத் தற்காலிகப் பேருந்து நிலையமாகப் பயன்படுத்தப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வந்தது.
இந்நிலையில், விளையாட்டு மைதானத்தை பேருந்து நிலையமாக மாற்றினால் அன்றாடம் இங்குத் தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகளின் பயிற்சி கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, வீரர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மைதானத்தில் திரண்டு தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

மைதானத்தில் நடைபெற்று வரும் தற்காலிக பேருந்து நிலைய அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை, அங்கிருந்த விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டனர். பொதுமக்களின் விளையாட்டு மைதானத்தைப் பேருந்து நிலையமாக மாற்றுவது அநீதி எனக் கூறி அமைச்சருடன் அவர்கள் அனல் பறக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், "தீபாவளிப் பண்டிகை கால கூட்ட நெரிசலை முறைப்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை முடியும் வரை மட்டுமே இப்பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், மைதானம் சேதமடையும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்து விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதால், மறைமலைநகர் பகுதியில் தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற அர்லேகர்..! பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முதல்வர் விஜய்..!!