தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும். செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு விஐபி நுழைவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும், அவரது ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு பாதுகாப்பு காரணங்களால் அந்த நுழைவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதையடுத்து விஜய்யும் வழக்கமான சர்வதேச முனையம் வழியாக சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.
செப்டம்பர் 11ஆம் தேதி லண்டன் சென்றடைந்த விஜய்க்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான சந்திப்புகளுக்கான பணிகள் தொடங்கின. செப்டம்பர் 12ம் தேதி சி.எம்.விஜய் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் தளத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்றார். போட்டியை விஜய் தொடங்கி வைத்ததுடன், பந்தயத் தளத்தின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்டுள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்துக்கான அனுபவங்களைப் பெறும் நோக்கத்துடனும் ஆய்வு நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது விஜய் - அஜிட் இருவரும் கட்டித் தழுவியது, இருவரும் பரிசுகளை பரிமாறிக்கொண்டது, விஜயை அமர வைத்து அஜித் ரேஸ் கார் ஓட்டியது போன்ற வீடியோக்களும், போட்டோக்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. செப்டம்பர் 13ம் தேதி, லண்டனில் தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
இதையும் படிங்க: லண்டனில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு தடை! போலீஸ் எடுத்த அதிரடி முடிவு! திடீரென ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி!
மறுநாள், பயணத்தின் முக்கிய முதலீட்டு அறிவிப்பாக, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் மற்றும் அதன் ஐரோப்பா, பிரிட்டன் கூட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, அசெம்பிளி மற்றும் தளவாடத் துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சிக்மா டெக்னாலஜி குழுமம், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ், ஒரு சர்வதேச நிறுவனத்தின் GCC உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,300 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த முதலீடுகளின் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லண்டனில் தமிழர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதிகளவில் மக்கள் திரண்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, விஜய்யை சந்திப்பதற்காக ஹோட்டல் முன்பாகவோ அல்லது அவர் பயணிக்கும் வழித்தடங்களிலோ பொதுமக்கள் கூட வேண்டாம் என தவெக தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டது.
சுமார் ஒரு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 16ஆம் தேதி இரவு லண்டனில் இருந்து புறப்பட்ட விஜய், இன்று காலை சுமார் 8 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் .
இதையும் படிங்க: CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!!