தேனி மாவட்டச் சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம், சிறைத்துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் எனப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், தேனி மாவட்டச் சிறையில் அக்டோபர் 26ஆம் தேதி இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே ஷாக்...!! - தமிழகமே அதிர்ந்த ‘ஜெயில் பிரேக்’... தேக்கம்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் மீது அதிரடி ஆக்ஷன்...!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தேனி மாவட்டச் சிறையில் அக்டோபர் 6ஆம் தேதி முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின்படி அக்டோபர் 30ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.
மேலும், சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பணியில் மெத்தனமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!