கோவை நகரின் பெருமையாகவும், பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் உருவாக்கப்பட்டு வந்த செம்மொழி பூங்கா இன்று (நவம்பர் 25) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அவசர அவசரமாக திறப்பு விழா நடத்தப்பட்டிருப்பது கோவை மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2010-ல் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த கனவுத் திட்டம்தான் இந்த செம்மொழி பூங்கா. 165 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது. 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் உயிர் பெற்ற இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் 208 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 2023-ல் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பூங்காவில் செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம், புதிர்த் தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று திறப்பு விழா நடந்தபோது, நுழைவாயில் பகுதி வேலைகள் நேற்று நள்ளிரவு தாண்டி முடிக்கப்பட்டன. மழை கொட்டியதால் கான்கிரீட் கூட ஈரமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: Breaking! அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடி! மக்கள் வெள்ளத்தில் மோடி!! உ.பி-யில் விழாக்கோலம்!!
1,000 பேர் அமரும் அரங்கம், குளிரூட்டப்பட்ட கண்ணாடி மாளிகை, குழந்தைகள் விளையாடும் ராட்டினங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட கேம்ஸ், ஏ.ஆர்., வி.ஆர். ஆய்வகங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இன்னும் முழுமையடையவில்லை. சிறைத்துறை அதிகாரிகள் தங்கியிருந்த பழமையான பங்களாக்களுக்கு வெளிப்புறம் மட்டும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இத்தனை பணிகள் நிலுவையில் இருக்கும் போது, ஏன் இவ்வளவு அவசரம் என்று கோவை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். “ஆட்சிக் காலம் முடிவதற்குள் அறிவித்த திட்டங்களை நிறைவு செய்யும் அவசரமா? அல்லது கருணாநிதியின் கனவுத் திட்டம் என்பதாலா?” என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.
திறப்பு விழாவுக்காக அனைத்து ஊழியர்களும் இரவு பகலாக உழைத்து, முடிந்தவரை பணிகளை முடித்திருக்கின்றனர். ஆனால், விழா முடிந்த பிறகு பூங்கா சுணங்கி விடக்கூடாது, நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்ப வேண்டும் என்று கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமாக உருவாக வேண்டிய இந்தப் பூங்கா, முழு அழகுடனும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: Go Back Stalin... கையில் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் குதித்த பாஜக இளைஞரணி... அலோக்காக தூக்கிய போலீஸ்...!