கோவை பேரூர் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில், வேளாண் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காரில் படுவேகமாக சென்ற இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதிய கோர விபத்தில், 4 பேர் துடிதுடித்து பலியான சம்பவம் ஓட்டுமொத்த கோவையையே உலுக்கியுள்ளது. அதிவேகம் ஆபத்தானது என்பதை உணராமல் நண்பர்களுடன் ஜாலியாக பயணித்தவர்கள், கடைசியாக மரணத்தை தழுவியது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவர் கோவை தெலுங்கு பாளையம் பிரிவில் உள்ள தனியார் வாட்டர் வாஷ் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அவருடன் வேலை பார்க்கும் தஞ்சாவூர் சேர்ந்த ஹரிஷ் (21) என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்களது நண்பர்களான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் பிரபாகரன் (19), அகத்தியன் (20), திருச்சியை சேர்ந்த சபரி அய்யப்பன் (21) ஆகியோர் ஒன்று கூடினர்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி கல்யாண சுந்தரத்தின் கார் கவிழ்ந்து விபத்து... போலீஸ் விசாரணை...!
பின்னர் சர்வீஸுக்கு வந்த காரை பிரகாஷ் எடுத்துக்கொண்டு ஐந்து பேரும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாட சிறுவாணி சாலையில் வேகமாகச் சென்றனர். அப்போது பேரூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரகாஷ், ஹரிஷ், சபரி ஐயப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அகத்தியன் கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் உயிரிழந்த இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடிய கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விசாரிக்க சென்ற பாஜக எம்.பிக்கள் குழு.. விபத்தில் சிக்கிய கார்கள்..!!