கடலூர் மாவட்டம் செம்மகுப்பம் ரயில்வே கிராசிங்கை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதியதில் வேன் தூக்கி வீசப்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் மற்றும் மற்றொரு மாணவர் உயிர் தப்பினர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றி உள்ள மக்கள் கேட் கீப்பர் எப்போதும் மெத்தனமாக தான் இருப்பார் என்று குற்றம் சாட்டிய நிலையில் இந்த விபத்துக்கு அவர்தான் காரணம் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், வேன் ஓட்டுநர் கேட்டதால் தான் கதவை திறந்து விட்டதாக கேட் கீப்பர் கூறியிருந்தார். ஆனால் தான் கேட் கீப்பரை பார்க்கவே இல்லை என்றும் அவரிடம் எதையும் கேட்கவில்லை எனவும் ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று மாணவர்களும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "கவாச்" குறைபாடு... காதுலையே வாங்கல..! மத்திய அரசை சாடிய கனிமொழி..!

இந்த நிலையில் ரயில்வே கேட் அருகில் வசிக்கும் நபர் ஒருவர், விபத்து ஏற்பட்டதை பார்க்க சென்றபோது மின்சார தாக்குதலுக்கு ஆளானார். அவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக அவர் கூறியபோது, ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்றும் கேட் கீப்பர் தூங்கிக் கொண்டுதான் இருந்தார் எனவும் 100 மீட்டர் தூரத்திற்கு வேன் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது; திடீர்ன்னு சத்தம் கேட்டுது என்ன ஆச்சுன்னு ஓடி வந்து பாத்தா வேன் போய் விழுந்துது.. கேட்டு திறந்து தான் இருந்துது... கேட் கீப்பர் தூங்கிட்டு இருந்தாரு என ரயில் மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளானதை பார்க்க வந்த போது மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான நபர் இதனை கூறினார். கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோர விபத்தில் பரிதாபமாக போன உயிர்கள்.. உயிரிழந்த மாணவர்களுக்கு முதல்வர் இரங்கல்..! ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!