கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தரைகாத்த காளியம்மன் கோயில் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய புயல் காற்றில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ராகு கால பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்த நிலையில், கோபுரத்தின் உச்சியில் அமைந்த கலசம் மீது மின்னல் பாய்ந்து சேதமடைந்து அடியோடு பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, கலசம் விழுந்த இடத்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தரைகாத்த காளியம்மன் கோயில் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக விளங்கி வருகிறது. குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். வழக்கம் போல் பலர் கோயில் வளாகத்தில் கூடி, அம்மனை வழிபட்டு விளக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

மாலை நேரத்தில் திடீரென வானம் இருண்டு, பலத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. பக்தர்கள் சிலர் மழையிலிருந்து தப்ப பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயன்ற நிலையில், சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த கலசம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி துண்டு துண்டாக சேதமடைந்து கீழே விழுந்தது.
இதையும் படிங்க: 'மன்மத தகனம்' அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!
சத்தம் கேட்டு ஓடி வந்த பக்தர்கள் கலசத்தின் நிலையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். நல்லவேளையாக பக்தர்கள் யாரும் காயமடையவில்லை. கோயில் நிர்வாகம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டது. கலசம் முழுமையாக சேதமடைந்துள்ளதால், அதை மீண்டும் பொருத்துவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த இடி... பறிபோகும் எம்எல்ஏ பதவி? - வெளியானது ஷாக்கிங் தகவல்...!