தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025-க்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்தது. ஆனால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இணையதளம் முடங்கியது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களாலும், பலர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்ததால் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!
சமீபத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. தமிழகத்தில் தற்போது சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி சுமார் 3.5 லட்சம் பேர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் இணையதளம் முடங்கியதால் ஏராளமானோர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
TNTET தேர்வு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர அல்லது புதிதாக நியமனம் பெற தகுதியை உறுதி செய்யும் முக்கியமான தேர்வாகும். இந்தத் தேர்வு முதல் தாள் (Paper I) மற்றும் இரண்டாம் தாள் (Paper II) என இரு பிரிவுகளாக நடைபெறும். முதல் தாள் தேர்வு வரும் நவம்பர் 15ம் தேதி அன்றும், இரண்டாம் தாள் தேர்வு நவம்பர் 16ம் தேதி அன்றும் நடைபெற உள்ளன.
விண்ணப்பத் திருத்தங்களுக்கு செப்டம்பர் 11 முதல் 12 வரை கால அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.600 மற்றும் SC, SCA, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும். தேர்வு OMR அடிப்படையில் நடைபெறும், மொத்தம் 150 கேள்விகளுடன் மூன்று மணி நேரம் நடைபெறும்.

இந்த நீட்டிப்பு அறிவிப்பு ஆசிரியர் பணியை விரும்புவோருக்கு கூடுதல் வாய்ப்பாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின்படி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தவறவிடாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!