மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டைப் போற்றும் வகையில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் திருச்சியின் சூரியூரில் கட்டி முடிக்கப்பட்டு, இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகக் குளக்கரையில் தற்காலிகமாக நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டிக்கு, நிரந்தர மைதானம் வேண்டும் என்ற மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், மின்னல் வேகத்தில் பணிகள் முடிக்கப்பட்டு இன்று பொங்கல் தினத்தில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.

ஜல்லிக்கட்டு மைதானத்தைத் திறந்து வைத்துப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திருச்சிக்கு மலைக்கோட்டையும் காவேரியும் எப்படியோ, அதுபோலவே சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு மிகப்பெரிய அடையாளம்; மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஒரு பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் இங்கேதான் கட்டப்பட்டுள்ளது" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், சூரியூர் பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி கட்டப்பட்டு வருவதாகவும், கடந்த ஆட்சியில் கிடப்பில் இருந்த ரிங் ரோடு பணிகளை திமுக அரசு முடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு காளை ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதற்கு ‘சூரியூர்’ எனப் பெயரிட்ட உதயநிதி, அடுத்த ஆண்டு மக்களுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசிக்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உலகமே நம்மள பார்க்கும்!" தொழில்நுட்ப உலகத்துல தமிழகம் முன்னோடி; உமேஜின் TN மாநாட்டில் அமைச்சர் அதிரடி!
மைதானத்தின் இருபுறமும் தலா 800 முதல் 900 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை (ஜனவரி 16) சூரியூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அந்த காரின் சாவியை விழா மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். ‘திராவிட மாடல்’ ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இந்தச் சூரியூர் மைதானமே சாட்சி எனத் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் தமிழ்நாடுதான்... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!