தாராபுரம் தொகுதியில் உள்ள வீராச்சிமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், வாக்காளர்கள் சிரமத்திற்குள்ளாகினர். மின்வெட்டு காரணமாக வாக்குச்சாவடி அலுவலர்களின் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் வாக்காளர்கள் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டது.
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் தாராபுரம் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளும் நேற்று செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், வீராச்சிமங்கலம் கிராமத்தில் உள்ள பூத் எண் 105-ல், வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!
சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக, வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே அரசு பள்ளி கட்டிடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்ததால், உள்ளே போதிய வெளிச்சம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் தடுமாறும் சூழலும் உருவானது.
இதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களிடம் இருந்த செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டு, அதன் வெளிச்சத்தில் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.
சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு மின்வெட்டு சரிசெய்யப்பட்டு மின்சாரம் மீண்டும் வந்தது. இதையடுத்து தற்போது வாக்காளர்கள் வழக்கம்போல் வாக்களித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!